இன்று உலக பழங்குடிகள் தினம் பழங்குடி மக்கள் வாழ்வு மேம்படுத்தப்படுமா
இன்று உலக பழங்குடிகள் தினம் பழங்குடி மக்கள் வாழ்வு மேம்படுத்தப்படுமா
உலக பழங்குடிகள் தினத்தை ஆகஸ்ட் 9
ஆம் தேதி கடைப்பிடிக்கும் நிலையில் குமரி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி
மலைகளில் வசிக்கும் பழங்குடி மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தும்
நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டுமென்று சமூக நல ஆர்வலர்கள் கோரி
வருகின்றனர்.
உலகமெங்கும் மரபின் மக்கள் என அழைக்கப்படும் பழங்குடி
மக்களின் குரல்கள் தற்போது ஓங்கி ஒலிக்கத் தொடங்கி விட்டன. ஐக்கிய நாடுகள்
சபை ஆகஸ்ட் 9ஆம் தேதியை உலக பழங்குடிகள் தினமாக அறிவித்துள்ளது. இந்த
அமைப்பு 2005-2015 காலகட்டத்தை மரபின் மக்களின் சகாப்தமாக அறிவித்து
உலகமெங்குமுள்ள பழங்குடி மக்கள் எதிர்கொள்ளும் சவால்களை, கோரிக்கைகளை
நிறைவேற்ற பல்வேறு செயல்திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது.
இதில், ஆதிவாசி பழங்குடி சமூகங்களின் மனித உரிமைகளைப்
பாதுகாத்தல், சமூக மேம்பாடு, கல்வி, பொருளாதார மேம்பாடு, கலாசார மேம்பாடு
ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எனினும் மாறிவரும் உலகச்
சூழலில் ஆதிவாசி பழங்குடி சமூகங்கள் புதுப்புது சவால்களையும்,
பிரச்னைகளையும் சந்திக்கவேண்டிய நிலை ஏற்பட்டு வருவதாக சமூகநல ஆர்வலர்கள்
கூறுகின்றனர்.
உலகம் முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆதிவாசி
பழங்குடி சமூகங்கள் உள்ளன. இதில், இந்தியாவில் மட்டும் 500-க்கும் அதிகமான
சமூகங்களில் சுமார் 8.5 கோடிக்கும் அதிகமான மக்கள் உள்ளதாகக்
கணக்கிடப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பழங்குடி
சமூகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் வசிக்கும் காணி பழங்குடி
மக்களே அதிகமாக உள்ளனர். இங்குள்ள தோட்டமலை, தச்சமலை, மாறாமலை, ஆறுகாணி,
களப்பறை, படுபாறை, வளையந்தூக்கி, மோதிரமலை, மூக்கறைக்கல், மல்லமுத்தன்கரை,
கூவைக்காடு, பத்துகாணி, எட்டுகாணி, ஒருநூறாம் வயல் என 48
காணிக்குடியிருப்புகளில் ஏறக்குறைய 5 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள்
வசிக்கின்றனர்.
கல்வியிலும், சமூக, பொருளாதார நிலையிலும் மிகவும்
பின்னடைவில் இருக்கும் இம்மக்கள் தங்களின் வாழ்வாதார உரிமைகள் தொடர்ந்து
மறுக்கப்பட்டு வருவதாகக் கோரிக்கை எழுப்பி வருகின்றனர்.
நடத்தப்படாத பழங்குடி கலாசார விழா: குமரி மாவட்டத்தில்
கடந்த 2011 மற்றும் 2012 ஆகிய ஆண்டுகளில் பேச்சிப்பாறையில் உலக
பழங்குடிகள் தினத்தையொட்டி பழங்குடி கலாசார விழா அரசு சார்பில்
நடத்தப்பட்டது.
இதில், தமிழகத்திலுள்ள பல்வேறு பழங்குடி சமூகங்கள்
பங்கேற்று தங்கள் பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் பிரதிபலிக்கும் கலை
நிகழ்ச்சிகளை நடத்தினர்.
மேலும் பழங்குடி சமூகத்தினர் மத்தியில் புதிய உறவுகளை
ஏற்படுத்திக் கொள்ளவும் இந்த நிகழ்ச்சி ஒரு வாய்ப்பாக அமைந்தது. பின்னர்
தொடர்ந்து வந்த ஆண்டுகளில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படவில்லை.
இதுகுறித்து, தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத் தலைவர்
ரெகுகாணி கூறியதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் பழங்குடி மக்கள் வசிக்கும்
பகுதிகளில் முழுமையாக அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை. அரசு வேலை
வாய்ப்புகளை நகரங்களில் வசிக்கும் சமூகங்கள் தட்டிப் பறிக்கின்றன. குமரி
மாவட்டத்தில் கடையாலுமூடு பேரூராட்சியில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு
ஆதார் அட்டைகள் கிடைக்கவில்லை. இதேபோன்று அரசின் இலவச வீடுகள் உள்ளிட்ட
பல்வேறு சலுகைகள் கிடைக்கவில்லை. உலக பழங்குடிகள் தினத்தையொட்டி
நடத்தப்படும் கலாசார விழாவும் தற்போது நடத்தப்படுவதில்லை. இதுபோன்ற
விழாக்கள் மீண்டும் நடத்தப்பட வேண்டும் என்றார்.
இதுகுறித்து, பேச்சிப்பாறை ஊராட்சித் தலைவரும், தமிழக
ஆதிவாசிகள் மகாசபை தலைவருமான எஸ். ராஜன் காணி கூறியதாவது: இந்தியாவில்
காடுகளில் வாழும் பழங்குடிகளில் உரிமைகளை காக்க மத்திய அரசு 2006ஆம் ஆண்டு
வன உரிமைச் சட்டம் கொண்டுவந்தது. இந்தச் சட்டம் தமிழகத்தில் இதுவரை அமல்
படுத்தப்படவில்லை.
இதனால் காணி பழங்குடி மக்களுக்கு இந்தச் சட்டத்தின்
மூலம் கிடைக்க வேண்டிய உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. மேலும் தற்போதுள்ள இட
ஒதுக்கீட்டு முறை காரணமாக காணி மக்களுக்கு அரசு வேலை வாய்ப்புகள்
கிடைக்கவில்லை. காணி பழங்குடி மக்கள் மத்தியில் கல்வி, சுகாதார
விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்றார்.
Subscribe to:
Post Comments
(
Atom
)

No comments :
Post a Comment